POLITICAL ECONOMICS
ஜகனே தந்திரம்
ஆந்திர முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி கடினமான பாதைகளை கடந்து வந்து கொண்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒன்றுபட்ட ஆந்திரா பிரிந்த பிறகு ஹைதராபாத் இல்லாத புதிய ஆந்திர மாநிலத்தின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தார். ஏற்கனவே போதிய அளவு நிதி ஒதுக்கியுள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை என்று கூறி மத்திய அரசு மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறினார். அன்றிலிருந்து ஆந்திராவிற்குத் தலைநகர் தலை வலி தொடங்கியது.
குறிப்பாக அமராவதியை சிங்கப்பூருக்கு நிகரான ஒரு ஸ்மார்ட் சிட்டி தலை நகரமாக மாற்றுவதற்கு சந்திரபாபு நாயுடு கடும் முயற்சி செய்து வந்தார். பிறகு புதிதாக பதவி ஏற்ற ஜெகன்மோகன் அரசு முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்து வந்தது.. அமராவதியை தலைநகரமாக மாற்றுவதில் ஜெகனுக்கு பெரும் ஈடுபாடு இல்லை. இந்த நிலையில் ஆந்திராவுக்கு அமராவதி உட்பட மூன்று தலைநகரங்களை உருவாக்கும் முடிவை அறிவித்து , சட்டப்பேரவையில் தனக்குள்ள பெரும்பான்மையை வைத்து இந்த மசோதாவை அதிரடியாக ஜெகன் நிறைவேற்றி விட்டாலும், பல வித சவால்களை சந்தித்து வருகிறார் .
மாஸ்டர் ஸ்ட்ரோக் :
இந்த இக்கட்டான நேரத்தில், உலக கோடீஸ்வரர்களுள் ஒருவரும் பெரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானியை தன் தாடப்பள்ளி வீட்டிற்கு வரவழைத்து ரிலையன்ஸ் குழும அதிபர் பிரமல் நாத்வானிக்கு ராஜ்ய சபா சீட்டு தருவதாக உறுதி அளித்து வளைத்துப் போட்டது ஜகன்மோகன் ரெட்டியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.
காக்கி நாடா இன்னொரு ஜாம் நகராக உருவாக வாய்ப்பு
ரிலையன்ஸ் நிறுவனம், குஜராத்தின் ஹஜிரா, ஜாம்நகர் மற்றும் மகாராஷ்ட்ராவின் பாதாளகங்கா போன்ற இடங்களில் பெட்ரோகெமிக்கல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நிறுவுவதற்கு பெரும் முதலீடுகள் செய்து வருகிறது. தற்போது இந்தப் பட்டியலில், ஆந்திராவும் இணைய வாய்ப்புள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா கோதாவரிப் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்திற்காக காக்கினாடாவிற்கு அருகே ரிலையன்ஸ் பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. ஆந்திராவிலிருந்து குஜராத்திற்கு எரிவாயு கொண்டு செல்ல 1400 கிமீ தூரத்திற்கு பெரும் செலவில் எரிவாயு குழாய்களைப் பொருத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் பெரும் நிறுவனமான அரம்கோ, கச்சா எண்ணெயிலிருந்து பலவித பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் வணிகத்தில் ரிலையன்சுடன் பங்கு வகிக்க உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரிலையன்ஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கக்கூடும். இந்த உடன்பாடு ரிலையன்ஸை, கடனற்ற நிறுவனமாக மாற்றி பெரும் அளவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் முதலீடுகள் செய்ய சிறந்த நிதி ஆதாரங்களை ரிலையன்ஸிற்கு வழங்கும்.
தொழில் வளர்ச்சிக்கான நிலங்களை கையகப்படுத்துவது மாநில அரசுகளுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறது. ஜகன்மோகன் அரசுக்குள்ள சட்டமன்றத்தில் உள்ள பெரும்பான்மை, பெருமளவில் நிலங்களை கையகப்படுத்த உதவும்., பிளவுப்பட்ட ஆந்திராவில் பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்க அம்பானி-ஜகன்மொகன் சந்திப்பு உதவும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த சந்திப்பு , ரீட்டைல் மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில், ஆந்திராவிற்கான பெரிய முதலீடுகளையும், இரண்டு வருடங்களாக கிடப்பில் இருந்த ரிலையன்ஸ் எலக்ட்ரானிக்ஸ் பார்க் திட்டம், மீண்டும் தொடங்குவதற்கான சாதகமான சூழலையும் உருவாக்கியுள்ளது.
ரிலையன்ஸிற்கு ஒரு ராஜ்யசபா எம்.பி சீட் கொடுப்பது,அவர்களின் முதலீட்டுடன் எண்ணெய், இயற்கை வாயு , மின்னணு உற்பத்தி போன்ற மிகப் பெரிய வணிகங்களில், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, ஆந்திராவை மிக வேகமாக ஒரு முன்னோடி மாநிலமாக மாற்ற ஜகனின் ராஜ (சேகர) தந்திரமாக கருதப்படுகின்றது.